jevanamsam


கணவன் தனது மனைவியிடமிருந்து இடைக்கால ஜீவனாம்சம் கேட்க முடியுமா என்பதையும் அவ்வாறு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்கை பற்றியும் இன்று தெரிந்துகொள்வோம்.

ரமேஷ் என்பவரும், அம்பிகேஸ்வரி என்பவரும் கணவன் மனைவி ஆவார்கள். அவர்களுக்கிடையே விவாகரத்து வழக்கு ஒன்று நடந்து வந்தது.

மேற்கண்ட வழக்கில் ரமேஷ் என்பவர் தான் உடல் ஊனமுற்றவர் என்றும், தன் மனைவி வேலைக்கு சென்று மாதம் ரூ. 30,000/- சம்பாதிப்பதாகவும், அவருக்கு தனிப்பட்ட முறையில் சொத்துகள் இருப்பதால் தனக்கு மாதம்தோறும் ரூ. 5000/- ஜீவனாம்சமாகவும், ரூ. 20000/- த்தை வழக்கு செலவுத் தொகையாகவும் தர உத்தரவிட வேண்டும் என்று கோரி இந்து திருமணச் சட்டம் பிரிவு 24 ன் கீழ் ஒரு இடைக்கால மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவிற்கு எதிருரை தாக்கல் செய்த மனைவி, திருமணத்திற்கு பிறகு கணவர் பெங்களூருக்கு வேலைக்கு சென்றதாகவும் பின்னர் வேலைக்கு செல்ல விருப்பமில்லை என்று கூறி வியாபாரம் செய்ய ஆசைப்படுவதாகவும் கூறினார்.

மேலும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகவும் தனது பெற்றோரிடமிருந்து ரூ. 100000/- வாங்கி கொண்டு வரும்படி சொன்னதாகவும் தினமும் குடித்து விட்டு வந்து பணம் கேட்டு அடித்து கொடுமைப்படுத்தியதாகவும் தன்னுடைய நகைகள் மற்றும் பணத்தை பிடுங்கி கொண்டதாகவும் தனது அத்தியாவசிய தேவைகளுக்கு கூட கணவர் பணம் தரவில்லை என்றும் கூறி அதன் காரணமாகவே அவரிடமிருந்து விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

மேலும் கணவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் வேண்டுமென்றே வேலைக்கு செல்லாமல் சோம்பேறியாக இருந்து கொண்டு தன்னிடம் ஜீவனாம்சம் கேட்பது நல்ல ஆணுக்கான அழகல்ல என்றும் கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ் வீட்டில் சும்மா படுத்துக் கொண்டு மனைவியிடமிருந்து இடைக்கால ஜீவனாம்சம் கேட்பதை ஏற்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதனை எதிர்த்து கணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

வழக்கை நீதிபதி திரு. M. வேணுகோபால் விசாரித்தார்.
இடைக்கால ஜீவனாம்சம் கோரி இந்து திருமணச் சட்டம் பிரிவு 24 ன் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்களை இருதரப்பினராலும் தாக்கல் செய்யப்படும் சத்திய பிரமாண வாக்குமூலங்களை கொண்டு முடிவு செய்ய வேண்டும்.

இந்து திருமணச் சட்டம் பிரிவு 24 ன் கீழ் உத்திரவிடுவதென்பது இந்து திருமணச் சட்டம் பிரிவு 25 அல்லது இந்து மகவேற்பு மற்றும் வாழ்க்கை பொருளுதவிச் சட்டம் அல்லது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125 ன் கீழ் உத்தரவிடுவது போன்றதாகும்.

கணவர் ஒருவர் சுயமாக சம்பாதிக்க எவ்வித தடையும் இல்லாத நிலையில் மனைவியிடமிருந்து இடைக்கால ஜீவனாம்சம் கேட்டு மனு ஒன்றை தாக்கல் செய்ய முடியாது.

வழக்கு செலவுகள் என்பதற்கு பிரிவு 24 ல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் கட்டணம், முத்திரைத்தாள் அல்லது நீதிமன்ற கட்டணம், குமாஸ்தா செலவு, எழுதுபொருள் செலவுகள் மற்றும் சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புவதற்கு ஆகும் செலவு ஆகியவை அடங்கும் என்று அந்த பிரிவில் கூறப்பட்டுள்ளது.

இராஜஸ்தான் உயர்நீதிமன்றம் "கோவிந்தசிங் Vs வித்யா" (AIR-1999-Rajasthan - 304) " என்ற வழக்கில், இந்து திருமணச் சட்டம் பிரிவு 24 ன் கீழ் இரு தரப்பினரும் மனுதாக்கல் செய்யலாம்.

ஒரு தரப்பினர் வருமானம் இல்லாத நிலையில் மற்றொரு தரப்பினர் ஜீவனாம்சம் கேட்கலாம். ஆனால் சம்பாதிக்கக் கூடிய திறன் இருந்தும் வேலைக்கு செல்லாமல் சோம்பேறியாக இருந்து கொண்டு மறு தரப்பினரிடம் ஜீவனாம்சம் கேட்க முடியாது.

இது ஆண், பெண் என இருவருக்குமே பொருந்தும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

இதே தீர்ப்பை அடியொற்றி கல்கத்தா உயர்நீதிமன்றம் "ரெசேனா மித்ரா Vs B. ஸ்ரீமதி சந்தானா மித்ரா" AIR-2004-Calcutta-61)" என்ற வழக்கிலும் மத்திய பிரதேச உயர்நீதிமன்றம்" யஸ்பால் சிங் தாக்கூர் Vs அஞ்சனா (AIR-2001-M.P-67)" என்ற வழக்கிலும் தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளது.

இடைக்கால ஜீவனாம்சம் கேட்டு தாக்கல் செய்யும் மனுக்களை விசாரிக்கும் போது கணவன் அல்லது மனைவியின் பொருளாதார சூழ்நிலைகளை மட்டுமே நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். தரப்பினர்களின் நடத்தை குறித்து பரிசீலிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த வழக்கில் ரமேஷ் தான் பார்த்துக் கொண்டு இருந்த வேலையை விட்டுவிட்டு சுயமாக வியாபாரம் செய்யப் போவதாக கூறி வீட்டில் சும்மா படுத்து கொண்டு சோம்பேறியாக இருந்துள்ளார்.

நல்ல உடல் நலத்துடனும், கல்வித் தகுதியோடும் ஏற்கனவே வேலையில் இருந்த ஒரு நபர், அந்த வேலையை விட்டுவிட்டு வெறுமனே வீட்டில் இருந்து கொண்டு தன்னுடைய வாழ்க்கை துணையிடம் இடைக்கால ஜீவனாம்சம் என்ற பெயரில் பணம் பறிக்கக்கூடாது.

பிரிவு 24 இந்த மாதிரியான நபர்களுக்கு உதவி செய்வதற்காக உருவாக்கப்பட்டதல்ல. வெறுமனே சோம்பேறியாக இருக்கும் நபருக்கு சட்டம் ஒருபோதும் உதவாது.

ரமேஷ் ஒரு சோம்பேறி என்று கூறி அவர் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

CRP. No - 1909/2010
Dt - 22.3.2013
ரமேஷ் Vs அம்பிகேஸ்வரி
அந்த நீதிமன்ற உத்தரவை இங்கே டவுன்லோடு செய்யவும்.

Click the Button Below to Download the File.

Download Now

Post a Comment

Previous Post Next Post