காவல்நிலையத்தில் கொடுக்கப்படும் புகார் மனுவின் மீது சரியான முறையில் விசாரணை நடைபெற வேண்டுமென்றால் இந்த CSR மிகவும் அவசியமான ஆவணமாகும்.
இந்த பதிவில் CSR பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் கீழே விளக்கமாகப் பார்ப்போம் 👇
காவல் நிலையத்தில் வழங்கப்படும் CSR என்றால் என்ன?
ஒரு குற்றம் நடந்துவிட்டது அல்லது குற்றம் நடக்க போகிறது என்றால் அந்த குற்றத்தை செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி நீங்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறீர்கள் அப்போது அதை பதிவு செய்து அந்தப் புகாரினை ஏற்றுக்கொண்டதற்கு சான்றாக காவல்துறை அலுவலர் CSR என்ற ரசீது ஒன்று கொடுப்பார்.
இது ஒரு முதன்மை பதிவு சான்று ஆகும், பொதுமக்களின் புகார்கள் காவல்துறை அதிகாரிகளால் அதிகாரப்பூர்வமாக பெற்றுக் கொள்ளப்பட்டதற்கான காவல்நிலைய ஆதாரம் ஆகும்.
இந்த CSR-ன் முழுமையான ஆங்கில விளக்கம் Community Service Register என்பது ஆகும். இதை தமிழில் சமூக சேவை பதிவு-Community Service Register. என்றும் கூறலாம். மேலும் இந்த CSR- ஐ மனு ஏற்புச் சான்றிதழ் என்றும் தினசரி டைரி அறிக்கை என்றும் சொல்லலாம், இது போன்ற பல பெயர்கள் இருந்தாலும் மனு ரசீது என்பதே அனைவராலும் அறியப்பட்ட பெயராகும்.
நீங்கள் எழுத்து மூலமாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் போது அந்த புகார் FIR ஆக பதிவு செய்யத் தகுதியில்லாத சிறிய குற்றமாக காவல்துறை அதிகாரி கருதினால் அல்லது தகவல் குறைவாக இருக்கிறது என அதிகாரி கருதினால் விசாரணை தேவைப்படுகிறது என்றால் FIR பதிவு செய்வதற்கு முன்பாக CSR பதிவு செய்வார்.
FIR பதிவு செய்யப்படாமலும் CSR-ரும் பதிவு செய்யப்படமலும் உங்கள் புகார் இருந்தால் அது பதிவு செய்யப்படாத புகார் ஆகும். அந்த புகாரை விசாரணை செய்ய காவல்த்துறை அதிகாரி எந்த முனைப்பும் காட்டமாட்டார் அந்த வழக்கு கைவிடப்படலாம்.
காவல்நிலையத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய புகார் மனுக்கள் பெறப்பட்டதும் அதன் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு புகாருக்கும் தனி தனி CSR எண் (CSR Number) காவல் அதிகாரியால் வழங்கப்படும்.
காவல்நிலையத்தில் புகாரை கொடுத்த பின் உங்கள் புகாரின் மீதான அடுத்த கட்ட நடவடிக்கைக்கு வேண்டி புகாருக்கான மனு ரசீது வேண்டும் அதாவது CSR வேண்டும் என கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
காவல்நிலையத்தில் ஏன் CSR பதிவு செய்ய படுகிறது FIR செய்யவில்லை?
புகாரை பெற்ற பின் அந்த புகாரில் சொல்லப்பட்ட குற்றத்தை வாகைப்படுத்தித்தான் உடனடியாக FIR பதிவு செய்யவேண்டுமா அல்லது CSR பதிவு செய்து வழக்கை விசாரித்து பின் FIR போடலாமா என்பதை காவல் அதிகாரி முடிவு செய்து நடவடிக்கை எடுப்பார்.
இதை எவ்வாறு வகைபடுத்துகிறார் என்றால் கிரிமினல் வழக்குகளை கைது செய்யக்கூடிய குற்றம் (cognizable offence) மற்றும் கைது செய்ய முடியாத குற்றம் (Non-cognizable offence) என BNSS சட்ட பிரிவு வரையறுத்து கூறுகிறது, அதன் அடிப்படையில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.
1. கைது செய்யக்கூடிய குற்றம் (Cognizable Offence) :
கைது செய்யக்கூடிய குற்றம் (Cognizable Offence) என்பது ஒரு காவல் அதிகாரி மஜிஸ்திரேட் வழங்கும் வாரண்ட் ஆணையில்லாமல் குற்றம் சாட்டப்பட்ட கைதியை நேரடியாக காவல்த்துறை அதிகாரியே கைது செய்யக்கூடிய குற்றமாகும் இது பெரும் குற்றங்களாக வகைப்படுத்தப்படுகிறது.
இவ்வகை குற்றங்கள் எடுத்துக்காட்டுகள் சில :
கொலை (Murder), திருட்டு (Theft), கொள்ளை (Robbery), பாலியல் வன்முறை (Rape), கடத்தல் (Kidnapping), மோசடி (Cheating with criminal intent) போன்றவை.
2. கைது செய்ய முடியாத குற்றம் (Non-cognizable offence) :
கைது செய்ய முடியாத குற்றம் (Non-Cognizable Offence) என்பது ஒரு காவல் அதிகாரி மஜிஸ்திரேட் வழங்கும் கைது வாரண்ட் ஆணையில்லாமல் குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய முடியாது மஜிஸ்திரேட் அனுமதி தேவை இந்த வகையான குற்றம் தீவிரமில்லாத குற்றமாக கருதப்படுகிறது.
இவ்வகை குற்றங்கள் எடுத்துக்காட்டுகள் சில :
அவதூறு (Defamation), சிறிய அடிதடி (Minor assault), சிறிய சண்டை (Simple hurt), மிரட்டல் (Criminal intimidation - minor level) போன்றவை.
CSR எந்த வழக்குகளில் வழங்கப்படுகிறது?
1. சிறிய தகராறு, நிதி விவகாரம் அல்லது குடும்ப பிரச்சனை போன்றவை.
2. பெரும் குற்றமாக கருதப்படாத விஷயங்களில்அதாவது cognizable offence குற்றமாக கருத்தப்படாத வழக்குகளில் FIR பதிவு செய்ய மாட்டார்கள். ஆனால் புகாரை காவல்துறை அதிகாரி பெற்றுக்கொண்டு CSR பதிவு செய்து CSR நகலை தருவார்.
3. தொலைந்து போன பொருள்கள், மொபைல், ஆவணங்கள் சார்ந்த வழக்குகள் ஆகியவை.
4. குடும்ப ஆலோசனை அல்லது மத்தியஸ்தம் தேவைப்படும் வழக்குகள்.
மேற்சொன்ன வழக்குகள் சார்ந்து காவல்நிலையத்தில் புகழளிக்கப்பட்டால் அதனை பெற்றுக்கொண்டு csr பதிவு செய்து விசாரணையை காவல்த்துறை அதிகாரி தொடங்குவர்.
CSR ன் முகியத்துவம் என்ன அதன் பயன்பாடுகள்?
உங்களது புகாரை நீங்கள் காவல் நிலையத்தில் பதிவு செய்து சிஎஸ்ஆர் ஐ பெற்றுக் கொண்டீர்கள் என்றால் அதனால் சில பயன்கள் உங்களுக்கு இருக்கிறது அதன் முக்கியத்துவத்தை பார்ப்போம்.
1. புகாரின் முன்னேற்றத்தை கண்காணிக்க பயன்படும் :
புகார் கொடுக்கப்பட்ட பிறகு உங்கள் புகாரில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது காவத்துறையின் விசாரணை எந்த நிலையில் இருக்கிறது என்பதை விசாரிப்பதற்கு இந்த சிஎஸ்ஆர் எண் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புகாரின் நிலையைவிரைந்து கண்டறிய CSR எண் உதவியாக இருக்கும்.
2. மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம் :
புகார் கொடுக்கப்பட்டு நீண்ட காலமாகியும் அதில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் சிஎஸ்ஆர் எண்ணின் மூலமாக உங்களது புகாரை காவல்த்துறை மேலதிகாரிகளின் (DSP/SP) கவனத்திற்கு எடுத்துச் செல்லலாம் இதன் மூலம் உங்களுடைய வழக்கை அடுத்த கட்டத்திற்கு முன்னெற்றுவதற்கு வாய்ப்புள்ளது.
3. புகாரை நிரூபிப்பதற்கான சான்று :
நீதிமன்றத்திலோ அல்லது பிறவி விசாரணைகளிலோ உங்களது புகாரை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது சி எஸ் ஆர் நகலானது முக்கியமான ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது. காரணம் சி.எஸ்.ஆரில் நீங்கள் புகார் அளித்த தேதி, நேரம், மற்றும் காவல் நிலையம் பற்றிய தகவல்கள் இடம்பெற்றிருக்கும் இது உங்கள் புகாரை நிரூபிக்க முக்கியமான சான்றாவணமாக உதவுகிறது.
4. சட்ட நடவடிக்கை எடுக்க பயன்படுகிறது :
உங்களது புகார் கொடுக்கப்பட்டும் அதில் எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் காவல்துறை அதிகாரியால் வழக்கு கைவிடப்பட்டால் அந்த புகாரை விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதற்காகவும் எஃப் ஐ ஆர் பதிவு செய்வதற்காகவும் நீதிமன்றத்தை அணுகி நீதிமன்ற உத்தரவை பெற முடியும். அதற்கு சி எஸ் ஆர் முக்கியமான சான்று ஆவணமாக பயன்படுகிறது.
மேற்கண்ட பல வகையில் சி எஸ் ஆர் (CSR) ஒரு புகார்தாரருக்கு அவரது புகாரின் மீது எடுக்கப்பட வேண்டிய நியாயமான சட்ட நடவடிக்கைக்கு முக்கியத்துவமான சான்றாக பயன்படுகிறது.
முடிவுரை :
காவல் நிலையத்தில் புகாரை கொடுத்த பிறகு உங்களது புகாருக்கு புகார் மனு ரசீது அதாவது ஜி எஸ் ஆர் ஐ கட்டாயம் வேண்டும் என நீங்கள் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும் இதுதான் உங்களுடைய புகாருக்கான ஆதாரம் ஆகும்.
காவல் நிலையத்தில் புகார் அளித்த அனைவருக்கும் அவரது புகார் விசாரணை செய்யப்பட்டு காவல்துறை அதிகாரியால் சி எஸ் ஆர் பதிவு செய்யப்பட வேண்டும். சி எஸ் ஆர் பதிவு செய்யப்பட்ட பின் உண்மையான குற்ற சம்பவங்களுக்கு அடுத்த கட்ட நடவடிக்கையாக எஃப் ஐ ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டு குற்றவாளிக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்பட வேண்டும்.
காவல்துறை அதிகாரி சி எஸ் ஆர் பதிவு செய்ய மறுத்தாலோ அல்லது சிஎஸ்ஆர் நகலை தருவதற்கு மறுத்தாலோ சி எஸ் ஆர் (CSR)பதிவு செய்ய லஞ்சம் கேட்டாலோ உடனடியாக காவல்துறை மேலதிகாரிகளிடம் (DSP/SP) புகார் அளியுங்கள் அவர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து உங்களுக்கு உதவி செய்வார்கள்.

