காவல் நிலையத்தில் புகாரளிப்பது எப்படி விளக்கமாக தெரிந்து கொள்ளுங்கள்?

Pragatheesh.BA.LLB (வழக்கறிஞர்)
By -
நம் சமூகத்தில் குற்றங்கள், சண்டைகள், மோசடிகள், அத்துமீறல்கள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தினசரி நடைபெற்று கொண்டே இருக்கின்றன. அப்படிப் பட்ட சூழலில் சட்டத்தின் பாதுகாப்பை நாடுவதற்கான முதல் படி காவல்நிலையத்தில் புகார் அளிப்பதே ஆகும். ஆனால் பலருக்கும் “எப்படி புகாரளிப்பது?”, “புகாரில் இருக்க வேண்டிய முக்கியமான தகவல்கள் என்ன?”, “சாட்சிகள் அவசியமா?”, “குற்றவாளியை அடையாளம் தெரியாவிட்டால் என்ன செய்வது?” போன்ற கேள்விகள் உள்ளன.

How-to-file-a-report-at-the-police-station?

இந்த கட்டுரையின் வழியாக, பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், காவல்நிலையத்தில் புகாரளிக்கும் நடைமுறைகள், சட்ட அடிப்படைகள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்களை விளக்கமாகப் பார்க்கலாம்.

புகார் மனு என்றால் என்ன?

புகார் மனு என்பது, ஒரு குற்றம் அல்லது தவறு நடந்திருக்கிறதோ அல்லது நடக்கப் போகிறது என்றாலோ குற்றம் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி பாதிக்கப்பட்ட நபர் காவல்துறைக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும் ஆவணம் புகார் மனு ஆகும். இன்னும் விளக்கமாக சொல்வதென்றால் புகார் மனு என்பது ஒரு குற்றம் நடந்ததாகக் கூறி எழுதப்பட்ட அல்லது வாய்மொழியாகக் கூறப்படும் அறிக்கையாகும்.

மனுவின் மூலம் காவல்துறைக்கு சம்பவத்தின் விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த மனுவின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் குற்றம் நடந்தது உறுதியானால் வழக்கு பதிவு செய்யபட்டு குற்றவாளிக்கு நீதிமன்றத்தின் மூலமாக தண்டனை வழங்கபடுகிறது.

எளிமையாகச் சொன்னால், “ஒரு தவறு நடந்துள்ளது, அதற்கான நீதி வேண்டும்” என்று பாதிக்கபட்டவர் சார்பாகக் காவல்துறைக்கு கொடுக்கப்படும் எழுத்து விண்ணப்பமே புகார் மனு ஆகும்.

எந்த காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும்?

குற்றம் நடந்துவிட்டால் நீங்கள் புகாரளிக்க சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலுள்ள காவல்நிலையத்திற்கு நேரில் சென்று புகாரளியுங்கள் இதைத்தான் ஜூரிடிக்‌ஷன் (jurisdiction) என்று சொல்வார்கள் ஜூரிடிக்‌ஷன் என்றால் குற்ற சம்பவம் நடந்த இடத்தில் நடவடிக்கை எடுக்க அதிகாரம் படைத்த காவல்நிலையம் என்பதாகும்.

குற்றம் நடந்த இடம் அல்லது நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள ஜூரிடிக்‌ஷன் (jurisdiction) காவல் நிலையத்திற்கே செல்ல வேண்டும்.
ஆனால் தற்போது கொண்டுவரப்பட்ட BNSS சட்டத்தின்படி உங்களால் குற்ற சம்பவம் நடந்த இடத்திற்கு அதிகாரமுடைய காவல்நிலையத்தில் மட்டுமல்ல வேறு எந்த காவல்நிலையத்திலும் புகாரளிக்க முடியும். 

• ​BNSS சட்டத்தின்படி, எந்தவொரு காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம் இதை Zero FIR வசதி எனப்படுகிறது.

BNSS சட்டத்தின் பிரிவு 173 கீழ் பூஜ்ஜிய FIR இன் முக்கிய அம்சங்கள் வரையறுக்கப்படுகிறது. பூஜ்ஜிய FIR என்றால் FIR பதிவு செய்ய அதிகார வரம்பு இல்லை என்பதாகும், அதாவது குற்றம் நடந்துவிட்டது என்றால் அல்லது குற்றம் நடக்க போகிறது என்றாலோ அதற்கு நடவடிக்கை எடுக்க மாநிலத்திலுள்ள எந்த காவல்நிலையதிலும் புகாரளிக்க முடியும். பிறகு அது சம்பவம் நடந்த இடத்தின் ஜூரிடிக்‌ஷன் (jurisdiction) காவல்நிலையத்திற்கு மாற்றப்படும். இது பொதுவாக பெண்கள், குழந்தைகள், அவசர குற்றங்கள் போன்ற sensitive விஷயங்களில் மிகவும் உதவும்.

பாதிக்கப்பட்டவர்கள் எந்த காவல் நிலையத்திலும் FIR பதிவு செய்யலாம், அந்த காவல் நிலைய எல்லைக்குள் குற்றம் நடக்கவில்லை என்றாலும் கூட. இதை பற்றி வாசகர்கள் விரும்பினால் இன்னொரு பதிவில் தெளிவாக பேசலாம்.

புகார் மனுவை யார் கொடுக்க வேண்டும்?

குற்றம் நடந்துவிட்டாலும் நடக்கப்போகிறது என்றாலும் அந்த குற்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்டவரோ சாட்சியோ அல்லது மூன்றாம் நபரோ  உட்பட யார் வேண்டுமானாலும் புகார் மனுவை சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் கொடுக்கலாம்.

எப்படி புகாரளிக்க வேண்டும்?

காவல்நிலையத்தில் புகார் அளிப்பதற்கு எந்த ஒரு குறிப்பிட்ட விதிமுறையும் இல்லை. எப்படி புகாரளிக்க முடியும் என்பதை பார்ப்போம்.

காவல்நிலையத்திற்கு நேரில் சென்றும் நடந்த குற்றத்தை விபரமாக வெள்ளைத் தாளில் தெளிவாக நீங்களே கைப்பட எழுதி உங்கள் கையொப்பத்துடன் (Signature) புகாரளிக்க முடியும் அல்லது காவநிலையத்திற்கு சென்று வாய்மொழியாககவும் நடந்த குற்றத்தைச் சொல்லி புகார் கொடுக்கவும் முடியும். வாய்மொழியாக புகார் கொடுத்தால், அங்கிருக்கும் போலீஸ் அதிகாரிகள் பொதுவாக ஒரு தலைமை காவலர் அல்லது துணை ஆய்வாளர் (SI) அந்த புகாரை எழுதி, புகார் அளித்தவருக்குப் படித்துக் காட்டி, அதன் நகலை உங்களுக்கு இலவசமாகக் கொடுக்க வேண்டும்.

மேலும் புகாரை நீங்கள் நேரடியாக காவல் நிலையத்தில் சென்று கொடுப்பதற்கு விரும்பவில்லை அல்லது காவல்நிலையத்திற்கு நேரில் செல்வதில் ஆபத்து இருக்கிறது என்றால் நீங்கள் புகாரை தபால் (Post) மூலமாகவோ அல்லது மின்னணுத் தொடர்பு (Electronic Communication) மூலமாகவோ, அதாவது இ-மெயில் (E-mail) அல்லது இணையதளம் மற்றும் போலிஸ் ஆன்லைன் போர்ட்டல் (Police Online Portal) மூலமாகவோ காவல் நிலையத்திற்கு புகாரை அனுப்பலாம். அந்த புகாரை பெற்றுக் கொண்டு காவல்துறையை அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புகாரில் இருக்க வேண்டிய முக்கியமான தகவல்கள் என்ன? 
(Essential details in a Complaint)

உங்கள் புகாரானது முடிந்தவரை தெளிவாகவும், முழுமையாகவும் இருக்க வேண்டும். புகாரில் அவசியம் நீங்கள் எழுத வேண்டிய சில தகவல்களை இங்கே வழங்கியுள்ளேன்.

1. உங்கள் விவரங்கள் : 

புகார் அளிப்பவரின் முழுப் பெயர், வயது, தந்தை/கணவர்/மனைவி பெயர், முழு முகவரி, தொலைபேசி எண்.

2. குற்றம் நடந்த இடம் : 

தெரு, கிராமம்/நகரம், மாவட்டத்தின் பெயர் உள்ளிட்ட துல்லியமான முகவரி.

3. குற்றம் நடந்த தேதி மற்றும் நேரம் : 

முடிந்தவரை துல்லியமான தேதி மற்றும் நேரம்.

4. குற்றத்தின் விளக்கம் : 

என்ன நடந்தது என்பதை விளக்கமாக விவரிக்கவும்.
உங்களுக்கு ஏற்பட்ட இழப்பு அல்லது காயங்கள் என்னென்ன என்பதை தெளிவாக விவரிக்கவும்.

குற்றம் எவ்வாறு நடந்தது என்பதை காலவரிசைப்படி தெளிவாக விவரிக்கவும்.

5. குற்றவாளியின் விவரங்கள் : 

குற்றம் செய்தவரின் பெயர், முகவரி (தெரிந்தால்).
அடையாளம் தெரியாதபட்சத்தில், அடையாளம் குறித்த தகவல்கள் (கீழே பார்க்கவும்).

6. சாட்சிகள் (Witnesses) : 

சம்பவத்தைப் பார்த்த சாட்சிகள் எவரேனும் இருந்தால், அவர்களின் பெயர் மற்றும் தொடர்புத் தகவல்கள்.

7. புகார் மனுவின் இறுதியில் வேண்டுதல் : 

புகார் மனுவின் கடைசி பாத்தியில் காவல்துறையிடம் என்ன வேண்டுகிறோம் என்பதை தெளிவாக எழுத வேண்டும். 

8. தேதி,நேரம் மற்றும் கையொப்பம் : 

புகாரின் இறுதியில் தேதி,நேரம் மற்றும் உங்கள் கையொப்பம் அல்லது விரல் ரேகை இருக்க வேண்டும் இதை கவனமாக சரி பாருங்கள்.

​9. வாய்மொழியாக கொடுக்கப்பட்ட புகாரை படித்து பார்க்கவும் : 

வாய்மொழியாக கொடுக்கப்பட்ட புகார் என்றால் நீங்கள் கையெழுத்திடுவதற்கு முன்பு, அதிகாரி எழுதியதை நீங்கள் படித்து அதில் இடம்பெற்றிருக்கும் குற்றவாளியின் பெயர்களை தேதி,நேரம் போன்றவற்றை சரி பார்த்து புகாரை ஒப்புக்கொண்டுள்ளதாகக் குறிப்பிடுவது நல்லது. 

புகாரை எழுதிய பின் தேதி,நேரம்,சாட்சி, மற்றும் குற்றம் செய்த குற்றவாளியின் பெயர்களை கவனித்து சரிபார்த்து கையெழுத்திடுங்கள். என்னென்றால் புகார் மனு தான் வழக்கின் மிக முக்கியமான ஆவணம் ஆகும் அதனால் அதை மிக தெளிவாக கவனமுடன் எழுதி புகாரை கொடுங்கள் தேவைப்பட்டால் புகார் மனுவை எழுத ஒரு வழக்கறிஞர் உதவியை பெறுங்கள் அவர் உங்களுக்கு உதவுவார்.

​புகாருக்கு சாட்சிகள் அவசியமா? 

குற்றத்தைப் பதிவு செய்ய (FIR போட) சாட்சிகள் கட்டாயம் தேவை என்றால் தேவையில்லை நீங்கள் கொடுத்த புகாரே போதுமானது. ஆனால், விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, சாட்சிகள் குற்றத்தை நிரூபிக்க மிகவும் உதவுவார்கள். சம்பவம் நடந்தபோது, உங்கள் அருகிலிருந்த அல்லது சம்பவத்தைப் பார்த்த நபர்கள் யாராவது இருந்தால், அவர்களின் பெயரைப் புகாரில் குறிப்பிடுவது விசாரணையைத் துரிதப்படுத்த உதவும்.
ஒருவேளை புகாரில் சாட்சிகள் எதையும் நீங்கள் குறிப்பிடவில்லை என்றால் புகாரை பெற்றுக் கொண்ட பிறகு காவல்துறை அதிகாரி விசாரணையின் போது சாட்சிகளைத் தேடுவர்.

குற்றவாளியை அடையாளம் தெரியாவிட்டால் என்ன செய்வது?

குற்றம் நடந்த பிறகு குற்றவாளி யார் என்று உங்களுக்கு அடையாளம் தெரியாத போது புகாரில் எப்படி குறிப்பிடுவது என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் :

குற்றம் செய்தவரை உங்களுக்குத் தெரியாவிட்டால், அல்லது அவரது பெயரைத் தெரியாவிட்டால், புகாரில் அவரைப் பின்வரும் துல்லியமான தகவல்களைக் கொண்டு விவரிக்கலாம். இது போலீஸார் விசாரணையைத் தொடங்கவும், குற்றவாளியை அடையாளம் காணவும் உதவும்.

• ​தோற்ற விவரம் (Physical Description).
• ​உயரம் (Height), எடை (Weight), தோல் நிறம் (Skin Tone).
• ​முக்கிய அடையாளங்கள் (Marks/Tattoos) அல்லது ஏதேனும் உடல் குறைபாடுகள்.
• ​தலைமுடி, மீசை, தாடி அமைப்பு.
• ​உடை (Clothing): சம்பவம் நடந்தபோது அவர்கள் அணிந்திருந்த உடையின் நிறம் மற்றும் வகை.
• ​மொழி (Language): அவர் பேசிய மொழி.
• ​சத்தம்/குரல் (Voice): குரல் கனமாக இருந்ததா, மெலிதாக இருந்ததா.
• ​போக்குவரத்துச் சாதனம் (Vehicle): அவர்கள் பயன்படுத்திய கார்/பைக் அல்லது வேறு வாகனம் (பதிவு எண், நிறம், மாதிரி).
• ​மற்றவர்கள்: "அடையாளம் தெரியாத ஒரு நபர் (Unknown Person)" அல்லது "அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் (Three Unknown Persons)" என்று குறிப்பிட்டு, அவர்களுக்கு இடையேயான வேறுபாடுகளைக் குறிப்பிடலாம்.

புகார் பதிவு செய்யப்பட்டதை உறுதிப்படுத்துங்கள் :

ஒரு குற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் காவல்நிலையத்தில் புகாரினை கொடுத்தால் அந்த புகார் பதிவு செய்யப்பட்டதை உறுதிப்படுத்த புகார் மனு ரசீது பெறுங்கள், புகார் மனு ரசீதை காவல்நிலையத்தில் CSR (COMMUNITY SERVICE RECORD) என்று அழைக்கபடுகிறது புகாரை கொடுத்த பிறகு CSR ரசீதை கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள். புகாரை பெற்றுக்கொண்டு வழக்கு பதிவு செய்யபட்டால் FIR நகலை காவல்துறை அதிகாரி உங்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் அதை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்.

காவல்துறையில் எப்போது புகார் அளிக்கலாம்?

ஒரு குற்ற சம்பவம் நடந்தவுடன் ஒருவர் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும். சில நேரங்களில் குற்றம் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே கூட புகாரை கொடுக்கலாம்.

போலிஸ் புகார் கொடுக்க காலதாமதம் ஆகலாமா?

போலிஸ் புகாரினை காலதாமதமின்றி கொடுப்பது வழக்கில் குற்றவாளி தப்பித்து கொள்ளாமல் விரைந்து பிடிக்க போலிஸ் அதிகாரிகளுக்கு உதவியாக இருக்கும், மேலும் காலதாமதமாக புகார் கொடுக்கும் போது குற்றவாளி சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளது.

சில சங்கடமான சூழ்நிலையில் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பலாத்காரம், குடும்ப வன்முறை, போன்ற குற்றங்கள் நடைப்பெற்றால் புகார்தாரர் மன உளைச்சலின் காரணமாக குற்ற சம்பவத்தைப் பற்றி புகாரளிக்க சில சமயஙகளில் நேரம் எடுத்துக் கொள்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் கால தாமதம் ஏற்பட்டாலும் ஒருவர் போலீசில் தயங்காமல் புகார் செய்யலாம்.

புகார் மனுவை டைப்பிங்க செய்து கொடுக்கலாமா?

ஆம் புகார் மனுவை கணினி மூலமாகவோ தட்டச்சி எந்திரம் மூலமாகவோ டைப்பிங் (typing) செய்து பிரிண்ட் எடுத்தும் கொடுக்கலாம். கையெழுத்திடும் இடத்தில் சரியாக நீங்கள் தான் கையெழுத்திட வேண்டும். 

புகார் மனுவை கையால் எழுதி கொடுக்கலாமா?

புகார் மனுவை சாதாரண வெள்ளை காகிதத்தில் கைப்பட எழுதி கொடுக்கலாம். கைப்பட எழுதும் போது எழுத்துக்கள் தெளிவாகவும் அடுத்தவர் படிக்கும் போது புரியும் வகையில் எழுத வேண்டும்.மேலும் எழுதும் வார்த்தைகளை அடித்து திருத்தி பலமுறை திரும்ப திரும்ப தெளிவில்லாமல் எழுத வேண்டாம் இது நீங்கள் யோசித்து யோசித்து பொய்யான புகாரை எழுதியுள்ளீர்கள் என்ற தோற்றத்தை புகாருக்கு ஏற்படுத்தும்.

முடிவுரை :

காவல்நிலையத்தில் புகாரளித்து குற்றவாளிக்கு தண்டனை வழங்குவதற்கு புகார் மனு தான் வழக்கின் முக்கியமான சாட்சி ஆவணமாகும் அதை தவறாக எழுதி விட்டால் குற்றம் நிரூபிக்படாமல் கூட போகலாம், காவல்நிலையத்தில் புகாரளிக்க புகார் மனு எழுதும் போது மேலே கூறியுள்ள அனைத்து விஷயங்களையும் கடைபிடித்தீர்கள் என்றால் யார் உதவியும் இல்லாமல் சரியான புகார் மனுவை உங்களால் எழுத முடியும்.   

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!