போலிஸிடம் புகார் கொடுக்க புகார் மனுவை எப்படி எழுத வேண்டும்.

போலீஸ் புகார் மனு என்றால் என்ன?


போலிஸ் புகார் மனு என்பது ஒரு குற்றம் நடந்து விட்டது என்றாலோ அல்லது குற்றம் நடக்க போகிறது என்றாலோ குற்றம் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி பாதிக்கப்பட்ட நபர் காவல்நிலையத்தில் கொடுக்கபடும் மனுவே புகார் மனு எனப்படும். இன்னும் விளக்கமாக சொல்வதென்றால் புகார் மனு என்பது ஒரு குற்றம் நடந்ததாகக் கூறி எழுதப்பட்ட அல்லது வாய்மொழியாகக் கூறப்படும் அறிக்கையாகும்.


புகார் மனுவின் நோக்கம்.


குற்றம் செய்த நபருக்கு தண்டனைப் பெற்று தருவதே புகார் மனுவின் நோக்கம். இதன் மூலமாக சமுக ஒழுக்கத்தை சரி செய்யவும், சட்டத்தை அவரவர் கையெடுக்காமல் குற்றம் செய்தவரை அரசு காவல்துறை மூலமாக கைது செய்து நீதிமன்றம் மூலமாக தண்டனை வழங்குவதால் மனிதர்கள் வாழக்கூடிய சமுதாயத்தில் தொடர் குற்றங்கள் நடைப் பெறுவதை இந்த நடைமுறை தடுக்கிறது.

புகார் மனுவை யார் கொடுக்க வேண்டும்?


குற்றம் நடந்துவிட்டாலும் நடக்கப்போகிறது என்றாலும் அந்த குற்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்டவரோ சாட்சியோ அல்லது மூன்றாம் நபரோ  உட்பட யார் வேண்டுமானாலும் புகார் மனுவை சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் கொடுக்கலாம்.

புகார் மனு ரசீது என்றால் என்ன?


ஒரு குற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் காவல்நிலையத்தில் புகாரினை கொடுத்தால் அந்த புகாரினை பதிவு செய்து கொடுக்கபடும் ரசீது தான் புகார் மனு ரசீது ஆகும் இதை ஆங்கிலத்தில் சுருக்கமாக CSR என்று சொல்வார்கள் விரிவான அர்த்தம் COMMUNITY SERVICE RECORD என்பதாகும்.
 

காவல்துறையில் எப்போது புகார் அளிக்கலாம்?


ஒரு குற்ற சம்பவம் நடந்தவுடன் ஒருவர் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும். சில நேரங்களில் குற்றம் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே கூட புகாரை கொடுக்கலாம்.

போலிஸ் புகார் கொடுக்க காலதாமதம் ஆகலாமா?


போலிஸ் புகாரினை காலதாமதமின்றி கொடுப்பது வழக்கில் குற்றவாளி தப்பித்து கொள்ளாமல் விரைந்து பிடிக்க போலிஸ் அதிகாரிகளுக்கு உதவியாக இருக்கும், மேலும் காலதாமதமாக புகார் கொடுக்கும் போது குற்றவாளி சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளது.

சில சங்கடமான சூழ்நிலையில் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பலாத்காரம், குடும்ப வன்முறை, போன்ற குற்றங்கள் நடைப்பெற்றால் புகார்தாரர் மன உளைச்சலின் காரணமாக குற்ற சம்பவத்தைப் பற்றி புகாரளிக்க சில சமயஙகளில் நேரம் எடுத்துக் கொள்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் கால தாமதம் ஏற்பட்டாலும் ஒருவர் போலீசில் தயங்காமல் புகார் செய்யலாம்.

புகார் மனு எப்படி இருக்க வேண்டும்?


புகார் மனு என்பது நமது பிரச்சனையை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் தேவையற்ற கதைகளை சொல்லி மனுவை பெரிதாக்கி கொண்டே போனால் எந்த பலனும் இல்லை. புகார் மனுவின் அமைப்பை ஐந்து பாகமாக பிரிக்கலாம்.

  1. மனுதார் மற்றும் எதிர்மனுதார் அறிமுகம்.
  2. குற்றத்திற்கான காரணம்.
  3. நடந்த குற்றம்.
  4. சாட்சியங்கள்.
  5. புகார் மனு வேண்டுதல்.

மனுதார் மற்றும் எதிர்மனுதார் அறிமுகம்.


மனுவை எழுத ஆரம்பித்தவுடன் மனுதாரருக்கும் எதிர்மனுதாரருக்கும் எப்படி பழக்கம் என்பதை எழுத வேண்டும்.

குற்றத்திற்கான காரணம்.


மனுதார் மற்றும் எதிர்மனுதார் அறிமுகத்திற்கு பிறகு குற்றத்திற்கான காரணத்தை சொல்ல வேண்டும் முன் பகையா அல்லது தற்போது ஏற்பட்ட பிரச்சனையா என்பதை எழுத வேண்டும்.

நடந்த குற்றம்.


போலிசிடம் புகாரை கொடுக்க புகாரை எழுதும் போது குற்றத்திற்கான காரணத்தை எழுதிய பிறகு என்ன குற்றம் நடந்தது என்பதை தெளிவாக எழுத வேண்டும்.

சாட்சியங்கள்.


புகார் மனுவை எழுதும் போது சாட்சியங்கள் மிக அவசியமாகும், குற்றம் என்ன நடந்தது என்பதை எழுதிய பிறகு குற்ற சம்பவத்தை பார்த்தவர்கள் யார் யார் என்பதை சாட்சியங்களாக எழுத வேண்டும்.

எடுத்துக்காட்டாக: மேற்படி எதிரி என்னை தாக்கிய போது சம்பவம் பார்த்து கொண்டிருந்த ராம் s/o குமார் மற்றும் பாபு s/o கிருஷ்ணன் என்பவர்கள் எதிரியை தடுத்து என்னை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் மேற்படி இருவரும் இந்த சம்பவத்தை நேரில் கண்ணால் கண்ட சாட்சிகளாகும்.

புகார் மனுவின் வேண்டுதல்.


புகார் மனுவின் கடைசி பாத்தியில் காவல்துறையிடம் என்ன வேண்டுகிறோம் என்பதை தெளிவாக எழுத வேண்டும். எடுத்துக்காட்டாக: மேற்படி எதிரி என்னை பொது இடத்தில் கொட்ட வாத்தை பேசி கையால் தாக்கி உடலில் காயம் ஏற்படுத்தி இனி உன்னை கண்டால் கொல்லாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேற்படி எதிரியால் எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எனவே சமூகம் மேற்கண்ட எதிரி மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்று தருமாறு வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வாறாக புகார் மனுவை கொடுக்கும் போது மேற்கண்ட அனைத்து தகவலும் இருக்கும் படி எழுதி கொடுக்க வேண்டும்.

புகார் மனுவை டைப்பிங்க செய்து கொடுக்கலாமா?


ஆம் புகார் மனுவை கணினி மூலமாகவோ தட்டச்சி எந்திரம் மூலமாகவோ டைப்பிங் (typing) செய்து பிரிண்ட் எடுத்தும் கொடுக்கலாம். கையெழுத்திடும் இடத்தில் சரியாக நீங்கள் தான் கையெழுத்திட வேண்டும். 

புகார் மனுவை கையால் எழுதி கொடுக்கலாமா?


புகார் மனுவை சாதாரண வெள்ளை காகிதத்தில் கைப்பட எழுதி கொடுக்கலாம். கைப்பட எழுதும் போது எழுத்துக்கள் தெளிவாகவும் அடுத்தவர் படிக்கும் போது புரியும் வகையில் எழுத வேண்டும்.மேலும் எழுதும் வார்த்தைகளை அடித்து திருத்தி பலமுறை திரும்ப திரும்ப தெளிவில்லாமல் எழுத வேண்டாம் இது நீங்கள் யோசித்து யோசித்து பொய்யான புகாரை எழுதியுள்ளீர்கள் என்ற தோற்றத்தை புகாருக்கு ஏற்படுத்தும்.

முடிவுரை :


புகார் மனு தான் வழக்கின் முக்கியமான சாட்சியாகும் அதை தவறாக எழுதி விட்டால் குற்றம் நிரூபிக்படாமல் கூட போகலாம் புகார் மனு எழுதும் போது மேலே கூறியுள்ள அனைத்து விஷயங்களை கடைபிடித்தீர்கள் என்றால் யார் உதவியும் இல்லாமல் சரியான புகார் மனுவை உங்களால் எழுத முடியும்.

கீழே உள்ள பதிவுகளையும் படித்து பாருங்கள் :







Post a Comment

Previous Post Next Post